

கொச்சி:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், 1996-98 ஆண்டுகளில் இ.கே.நாயனார் மந்திரிசபையில் மின்துறை மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற கம்பெனிக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் செய்து, மாநில அரசின் கஜானாவுக்கு ரூ.374½ கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து, விடுவித்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை நீதிபதி பி.உபைது விசாரித்து, சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும், பினராயி விஜயனை விடுதலை செய்தும் நேற்று தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பில் பினராயி விஜயனுக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாத நிலையில், இந்த வழக்கு தவறாக தொடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்றுள்ளது. இதுபற்றி அந்த கட்சி குறிப்பிடுகையில், “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாட்டை தீர்ப்பு நிலைநாட்டி உள்ளது” என கூறியது.