தேவசம் போர்டின் பதவி காலத்தை 2 ஆண்டாக குறைக்க அவசர சட்டம்: கேரள மந்திரிசபை முடிவு

தேவசம் போர்டு நிர்வாகிகளின் பதவி காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேவசம் போர்டின் பதவி காலத்தை 2 ஆண்டாக குறைக்க அவசர சட்டம்: கேரள மந்திரிசபை முடிவு
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் நிர்வாகம் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதன்படி, கேரளாவின் தென்பகுதியில் உள்ள கோவில்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டும், மத்திய கேரளாவில் உள்ள கோவில்களை கொச்சி தேவசம் போர்டும், குருவாயூர் கோவில், குருவாயூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும், வடகேரளாவில் உள்ள கோவில்கள் மலபார் தேவசம் போர்டின் நிர்வாகத்தின் கீழும் செயல்பட்டு வருகிறது.

தேவசம் போர்டுகளுக்கு நியமிக்கப்படும் தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்கள் 3 ஆண்டு காலம் அந்த பதவியில் இருக்கலாம். அதன் பிறகே புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பதவி காலத்தை குறைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், தேவசம் போர்டு நிர்வாகிகளின் பதவி காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அவசர சட்டம் பிறப்பித்து, அதற்கு கவர்னரின் ஒப்புதலை பெறவும் முடிவு செய்யப்பட்டது. இம்மாதமே இத்திட்டம் அமலுக்கு வருமென்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சபரிமலையில் மண்டல பூஜை விழா தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் உறுப்பினர்கள் மாற்றப்பட்டால் இந்நிர்வாகம் பாதிப்புக்கு ஆளாகும்.

எனவே அரசு எடுத்துள்ள முடிவை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலை கோவிலின் நிர்வாகத்தை கவனித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக பிரையர் கோபாலகிருஷ்ணன் உள்ளார். இவர், பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. அரசின் அவசர சட்டம் அமலுக்கு வந்தால் பிரையர் கோபாலகிருஷ்ணன் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com