காட்பாடி அருகே மது போதையில் காவலாளி கொலை- தொழிலாளி கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் காவலாளியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி அருகே மது போதையில் காவலாளி கொலை- தொழிலாளி கைது
Published on

வாலாஜா:

காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் (40). இவர் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக்கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேதாஜி நேற்று இரவு 8 மணியளவில் சேவூரில் உள்ள பொது இடத்தில் வைத்து மது அருந்தினார்.

அப்போது அங்கு வந்து அருளும் மது அருந்தி உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

அப்போது நேதாஜி மதுபோதையில் அருளின் கையில் கடித்தார். அதனால் வலியில் துடித்த அருள் ஆத்திரம் அடைந்து நேதாஜியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.

பின்னர் அவரின் தலையை பிடித்து அருகேயுள்ள சுவரில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நேதாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருளை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com