

87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.
அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.
முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.
தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்த மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் என்.என். வோராவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அம்மாநில எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கவர்னரை சந்தித்தார். அதன் பின்னர், ஆட்சியமைக்க தேசிய மாநாட்டு கட்சி எந்த முயற்சியும் எடுக்காது என கூறினார். மேலும், கவர்னர் ஆட்சி அமல்படுத்த இருப்பதாக கவர்னர் கூறியதையும் உமர் அப்துல்லா தெரிவித்தார். #KashmirCMresigns #BJPDumpsPDP #MehboobaMuftiresigns