

கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலையில் தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும், கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சுடலைக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்ததாவது:
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2018 ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்கும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்யவும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஏதுவாக 3.10.2017 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் 30.11.2017 வரை வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 08.10.17 அன்று நடத்திய சிறப்பு முகாமில் 3510 விண்ணப்பங்களும், 22.10.17 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 5205 விண்ணப்பங்களும், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக 912 விண்ணப்பங்களும் என 9627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்ப்பதற்காக 5754 நபர்களும் பெயர் நீக்கம் செய்வதற்காக 1595 நபர்களும் திருத்தம் மேற்கொள்வதற்காக 1493 நபர்களும் இடமாற்றம் தொடர்பாக 785 நபர்களும் என 9627 நபர்கள் மனு செய்துள்ளனர்.
மேலும் கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள் என 9688 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுநாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற் கொள்ளாதவர்கள் 30.11.2017 க்குள் மனுக்கள் அளிக்கலாம் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்தார்.