மின்கம்பியை மிதித்த விவசாயி பலி - காப்பாற்ற முயன்ற நாயும் உயிர் விட்ட பரிதாபம்

கறம்பக்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாயும் பரிதாபமாக உயிரிழந்தது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருப்பையா (உள்படம்) மற்றும் அவரது வளர்ப்பு நாய்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருப்பையா (உள்படம்) மற்றும் அவரது வளர்ப்பு நாய்
Published on

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 47). விவசாயியான இவர் நேற்று காலை மழையூர் பெரமையா சுவாமி கோவில் அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றார். அவருடன் வளர்ப்பு நாயும் உடன் சென்றது. தோட்டத்திற்கு அருகே சென்றபோது அங்கே மழையினால் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் கருப்பையா மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அவருடன் வந்த வளர்ப்பு நாய், அவரது வேட்டியை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றது. ஆனால் மின்சாரம் தாக்கி நாயும் உயிர் இழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, உயிரிழந்த நாயின் உடல் மழையூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான விவசாயி கருப்பையாவின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது கருப்பையா இறந்த நிலையில் அவரது மகன், மகள் பெற்றோர் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இச்சம்பவம் மழையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com