அமைச்சர் பதவி தருவதாக கூறி தினகரன் அணிக்கு அழைத்தனர்: சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

தினகரன் அணியில் இருந்து எனக்கு பலமுறை அழைப்பு வந்தது, அமைச்சர் பதவி தருவதாக கூறி தினகரன் அணிக்கு அழைத்தனர் என்று சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.
கனகராஜ் எம்.எல்.ஏ.
கனகராஜ் எம்.எல்.ஏ.
Published on

கோவை:

கோவை சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது,

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது எனது கருத்து. தற்போது எதிர்கட்சிகள் எல்லாம் ஓரணியில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. மட்டும் தனித்து இருக்கிறது.

அம்மா இருந்த காலத்தில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. ஆனால் தற்போது இருக்கும் நிலை வேறு. பா.ஜனதாவுக்கு படித்த இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் குறிப்பிட்ட வாக்குகள் அவர்களுக்கு உள்ளது. எனவே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால்தான் வெற்றி பெற முடியும். எனவே எனது கருத்தை கட்சி தலைமைக்கு தெரியபடுத்துவேன்.

தினகரன் அணியில் இருந்து எனக்கு பலமுறை அழைப்பு வந்தது. அமைச்சர் பதவி தருவதாகவும் கூட கூறினார்கள். தினகரனின் ஆதரவாளர்களான நாகராஜன் எம்.பி.யும், முன்னாள் எம்.பி. சிவசாமியும் பலமுறை என்னை நேரில் சந்தித்து பேசினார்கள். ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

தினகரன் அணிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஆள் பலம் இல்லை. முதலில் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணி தனித்தனியாக பிரிந்து இருந்தபோது 2 அணிகளும் இணைய வேண்டும் என தினகரன் கூறினார். ஆனால் இணைந்த பிறகு இடைஞ்சல் செய்து வருகிறார்.

தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என 2 அணியினரும் முடிவு செய்து விட்டார்கள். எனவே அவர் ஒதுங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் 40 எம்.எல்.ஏ.க்களை சேர்த்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்.

தினகரனின் நடவடிக்கையெல்லாம் தி.மு.க.வுக்கு தான் சாதகமாக உள்ளது. இது கட்சியை பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com