கள்ளக்குறிச்சியில் சரமாரியாக வெட்டி வக்கீல் படுகொலை: போலீஸ் குவிப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே முன்விரோதம் காரணமாக வக்கீல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சியில்  சரமாரியாக வெட்டி வக்கீல் படுகொலை: போலீஸ் குவிப்பு
Published on

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 41). பிரபல வக்கீல் ஆவார்.

கள்ளக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளராகவும் ஜெயப்பிரகாஷ் இருந்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், வக்கீல் ஜெயப்பிரகாசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாசை தீர்த்துக் கட்ட கிருஷ்ணன் முடிவு செய்து கூலிப்படையை தேர்வு செய்தார்.

நேற்று இரவு 10 மணி அளவில் ஜெயப்பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் தென்கீரனூரில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றார். அங்கு கடையில் பொருட்களை வாங்கி விட்டு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி பாலம் அருகே சென்ற போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் கிருஷ்ணன், அவரது அண்ணன் வேலு மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் வந்தனர்.

அவர்கள் திடீரென்று ஜெயப்பிரகாஷ் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே ஜெயப்பிரகாஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.

அப்போது அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கழுத்து, கை-கால் போன்ற இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஜெயப்பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்ததும் கிருஷ்ணன் உள்பட 6 பேரும் வாகனங்களில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த ஜெயப்பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வக்கீல் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்கீரனூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அதே பகுதியில் உள்ள எல்.ஐ.சி. ஏஜெண்டு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் கிருஷ்ணனுக்கு சொந்தமான 2 வீடுகளுக்கும் தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணனின் மனைவி மற்றும் மைத்துனர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணன், அவரது அண்ணன் வேலு மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஜெயப்பிரகாஷ் உடல் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டுள்ளனர். அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்னர்.

படுகொலை செய்யப்பட்ட ஜெயப்பிரகாசுக்கு வெண்ணிலா (38) என்ற மனைவியும், சூரியா, ஸ்ரீராம் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

#TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com