

விழுப்புரம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் இளையாழ்வார். பிரபல தொழில் அதிபர். இவருக்கு கோடிக் கணக்கான மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இவரது மனைவி குமுதம் (வயது 60).
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இளையாழ்வார் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இளையாழ்வார் இறந்து விட்டார்.
இந்த நிலையில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சிக்கு குமுதம் வந்திருந்தார். அவர் சாலையோரம் நின்று கொண்டு பக்தர்கள் தேரை இழுத்து செல்வதை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று குமுதத்தின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் குமுதம் கீழே சாய்ந்தார்.
உடனே அங்கிருந்த கத்தியால் குத்தி விட்டு ஓட முயன்ற வாலிபரை பக்தர்கள் மடக்கி பிடித்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த குமுதத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமுதம் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கள்ளக்குறிச்சி கவரை தெருவைச் சேர்ந்த குமார் (32) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
குமாரின் சித்தப்பாவான கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகனுக்கும், குமுதத்துக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதை மனதில் வைத்து கொண்டு நேற்று கள்ளக்குறிச்சி கோவில் திருவிழாவுக்கு வந்த குமுதத்தை வாலிபர் குமார் கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.