கேரளா: வன்முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டிற்கு சென்று அருண் ஜெட்லி ஆறுதல்

கேரளாவில் கடந்த மாதம் வெட்டிக் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் வீட்டிற்கு இன்று சென்ற மத்திய மந்திரி அருண் ஜெட்லி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
கேரளா: வன்முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டிற்கு சென்று அருண் ஜெட்லி ஆறுதல்
Published on

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்வது உண்டு. ஸ்ரீகார்யம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(34) என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டரை கடந்த மாதம் 29ம் தேதி, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேஸ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜேஷை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தான் கொன்றனர் என ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிழவி வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அருண் ஜெட்லி இன்று கேரளாவில் உள்ள ராஜேஸின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கும்மணம் ராஜசேகரன் மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர். 

அதன்பின் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அருண் ஜெட்லி , ”ராஜேஷ் மிகவும் ஏழ்மையான சமூகத்தை சேர்ந்தவர். அவரை இழந்ததன் மூலம் அவர் குடும்பம் கதியற்று போய்விட்டது. அவர் ஒற்றுமையை குறிக்கோளாக கொண்டவர். இருப்பினும், குற்றவாளி்கள் அவர் மீது 70 காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். நம் நாட்டின் எதிரிகள் கூட இப்படி ஒரு காரியத்தை செய்ய மாட்டார்கள்.” எனக் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரின் உறவினர்களை கவர்னர் மாளிகை முன் கூட்டி அவர்கள் வீடுகளுக்கும் அருண் ஜெட்லி செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com