ஆயுள் தண்டனை கைதி தற்கொலை - ஜெயில் காவலர் சஸ்பெண்டு

ஆயுள் தண்டனை கைதி கஜேந்திரன் தற்கொலை செய்துகொண்ட அறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை கைதி தற்கொலை - ஜெயில் காவலர் சஸ்பெண்டு
Published on

வேலூர்:

ஆற்காடு தாலுகா மேலநேச்சபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 44). இவர், 1996-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

1998-ம் ஆண்டு கஜேந்திரன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு பரோலில் சென்ற அவர், தலைமறைவாகி விட்டார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கஜேந்திரன் 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கஜேந்திரன் கடந்த 24-ந் தேதி அதிகாலையில் 2-வது பிளாக்கில் கைதிகள் அறையில் உள்ள கழிவறை ஜன்னலில் ஷூ லேஸ்களால் தயாரித்த கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காட்பாடி மாஜிஸ்திரேட்டு ஜெயகாந்தன் ஜெயிலில் சுமார் 1½ மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதி கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட அறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பிரகாசை, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ஜெயில் டி.ஐ.ஜி. ஜெயப்பாரதி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com