புனேயில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - மராட்டிய கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

மைதான பராமரிப்புக்கு தண்ணீரை பயன்படுத்த கோர்ட் தடை விதித்த நிலையில், திட்டமிட்டபடி ஐ.பி.எல். போட்டி புனேயில் நடக்கும் என்று மராட்டிய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. #IPL2018 #CSKvRR
புனேயில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - மராட்டிய கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
Published on

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்த அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த 11-ந்தேதி சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் புனேயை வீழ்த்தியது.

இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் நடந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு மைதானத்துக்குள் சென்ற சிலர் செருப்புகளை வீசினார்கள். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் கோ‌ஷங்களும் எழுப்பட்டது.

இதைதொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களை ஐ.பி.எல். நிர்வாகம் புனேக்கு மாற்றியது.

இதற்கிடையே புனேயில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “மராட்டிய மாநிலத்தில் வறட்சி நிலவும் நிலையில் பவானா அணையில் இருந்து தண்ணீரை எடுத்து புனே மைதானத்தை பராமரிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மராட்டிய கிரிக்கெட் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பவானா அணையில் இருந்து தினமும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் எடுக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஒகா, சாகலா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மராட்டிய கிரிக்கெட் சங்கம் மற்றும் அரசு இடையிலான ஒப்பந்தம் தவறானது. தொழில் நிறுவனத்துக்காக தண்ணீர் பயன்படுத்தப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. அப்படியானால் ஐ.பி.எல். மூலம் என்ன தொழில் நிறுவனம் நடத்தப்படுகிறது.

தொழில் என்ற பெயரில் சட்ட விரோதமாக பொழுதுபோக்கு அல்லது மைதான பராமரிப்புக்காக தண்ணீரை எடுக்கிறார்கள்.

இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புனே மைதான பராமரிப்புக்காக பவானா அணை நீரை பயன்படுத்த மராட்டிய கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து புனேயில் ஐ.பி.எல். போட்டிகள் நடக்குமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே புனேயில் திட்டமிட்டப்படி ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என்று மராட்டிய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மராட்டிய கிரிக்கெட் சங்க தலைவர் அபய அப்தே கூறும்போது, “புனேயில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் நீர்பாசன தண்ணீரை பயன்படுத்தவில்லை. தினசரி நாங்கள் நீரை பயன்படுத்தவில்லை. எங்களது நீர்தேக்கம் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீரை கொடுக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com