கொள்ளையர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்த 3 பேரிடம் விசாரணை

வங்கி லாக்கரை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்த ஏஜென்சி ஊழியர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்த 3 பேரிடம் விசாரணை
Published on

பூந்தமல்லி:

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 லாக்கர்களை வெல்டிங் வைத்து உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபற்றி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதில் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வந்த நேபாளத்தை சேர்ந்த சபின்லால்சந்த், தனது மகன் திலுவுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் லாக்கர் உடைக்கப்பட்ட பகுதியில் இருந்து கொள்ளையர்கள் 3 பேரின் கைரேகைகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விருகம்பாக்கத்தை சேர்ந்த மரியா அன்பழகன், கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்த சுசித்ரா ஆகியோரின் 259, 654 ஆகிய 2 லாக்கர்கள் மட்டும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில், சுசித்ரா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது லாக்கரில் இருந்த 130 பவுன் நகை கொள்ளைபோனதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிறகு வங்கியில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி, ஒவ்வொருவராக அவர்களது லாக்கரை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி வாடிக்கையாளர்களும் வங்கிக்கு வந்து தங்கள் லாக்கரை பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையில் கொள்ளையர்கள், வங்கி லாக்கரை வெல்டிங் வைத்து உடைக்க பயன்படுத்திய கியாஸ் சிலிண்டர் அமைந்தகரையில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சியில் இருந்து வினியோகம் செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் 3 பேரிடம் கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த கியாஸ் சிலிண்டரை என்ன உபயோகத்துக்காக வாங்கினார்கள்?, அதனை யார் வாங்கியது?. லாக்கரை உடைக்கும் வெல்டிங் எந்திரத்தை எங்கு வாங்கினார்கள்? என்பது குறித்தும், அந்த கியாஸ் ஏஜென்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com