துப்பாக்கியுடன் போலீஸ்காரர் கைது: சென்னை தாதாவை பிடிக்க தனிப்படை

திருச்சியில் கள்ள துப்பாக்கிகள் விற்றது தொடர்பாக போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்டடதை அடுத்து சென்னை தாதாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் துப்பாக்கியுடன் கைதான சென்னை போலீஸ் பரமேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜ், சிவா
திருச்சியில் துப்பாக்கியுடன் கைதான சென்னை போலீஸ் பரமேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜ், சிவா
Published on

திருச்சி:

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் கள்ள துப்பாக்கி விற்கும் கும்பல் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து ஆயுத கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருச்சி கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் கும்பல் தங்கியிருந்த ஓட்டல் அறையில் அதிரடியாக நுழைந்து 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 நவீன ரக பிஸ்டல்கள், மற்றும் 10 தோட்டாக்களை கைப்பற்றினர். போலீஸ் விசாரணையில் துப்பாக்கிகளுடன் இருந்தவர்கள் சென்னை செம்பியத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 35) வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த சிவா என தெரிய வந்தது.

இதில் பரமேஸ்வரன் சென்னை பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சிவா சென்னையில் பைனான்ஸ் செய்து வருகிறார். ஏட்டு சிவாவின் உறவினரான நாகராஜ் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார்.

போலீஸ் ஏட்டு பரமேஸ்வரன் மீது அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளது. இதனால் சென்னையில் பிரபல தாதாக்கள், ரவுடிகள் ஆகியோரிடமும் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் வடமாநிலத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கும் கும்பலுடன் பரமேஸ்வரனுக்கு தொடர்பு ஏற்பட்டது.

இத்தொழிலில் சென்னையில் பிரபலமாக உள்ள பிரகாஷ், பரமேஸ்வரனுக்கு பழக்கமானார். ரூ.10 ஆயி ரம், ரூ.20 ஆயிரத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் துப்பாக்கிகளை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை வைத்து விற்று வந்துள்ளனர்.

இதற்கு ஆட்டோ ஓட்டி வந்த தனது உறவினரான நாகராஜையும் ஏட்டு பரமேஸ்வரன் உதவியாக வைத்துக் கொண்டார். இவர்கள் துப்பாக்கி தேவைப்படுகிறவர்களுக்கு அந்த ஊருக்கே சென்று விற்று வந்துள்ளனர். இவர்களுடன் பிடிபட்ட பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த சிவா, சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இதில் இவர் பைனான்ஸ் செய்த பணம் பல இடங்களில் திரும்பி வரவில்லை. இத்தொழிலில் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்க வந்த போது பரமேஸ்வரன், நாகராஜூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களாக போலீஸ் ஏட்டு பரமேஸ்வரன் சென்னை, கோவை, நாகை, மதுரை உள்பட பல இடங்களில் கள்ள துப்பாக்கிகளை விற்று வந்துள்ளார்.

கள்ள துப்பாக்கி விற்று வந்த ஏட்டு பரமேஸ்வரன் அடிக்கடி குடித்து விட்டு ரகளை செய்தது, ரவுடிகளுடன் சேர்ந்து அடிதடியில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதற்காக ஒருமுறை போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் பணியில் சேர்ந்து தொழிலை யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் கள்ள நோட்டு கும்பலுடனும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். மும்பை, உள்பட வெளி மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்து ரவுடிகள், கடத்தல்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தேவைப்படுவோர்களுக்கு விற்று வந்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக இவர்கள் தொழிலை எந்த தடையும் இன்றி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் சென்ற ரெயிலில் நேற்று முன்தினம் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், திருமங்கலம் நேருநகர் கமல் ஆகியோரை வேப்பேரி போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் 6 துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தான் பிரதீப் மற்றும் கமல் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கிகளை நெட்வொர்க் வைத்து புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்யும் கும்பல் பற்றி தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் ஏட்டு பரமேஸ்வரன் உள்பட 3 பேரையும் திருச்சியில் போலீசார் மடக்கினர்.

கள்ள துப்பாக்கி கும்பலை திருச்சிக்கு வரவழைத்து அவர்களிடம் துப்பாக்கி விலைக்கு வேண்டும் என நடித்து ஏமாற்றி மடக்கினர். கைதான பரமேஸ்வரன், நாகராஜ், சிவா ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஏட்டு பரமேஸ்வரன் உள்பட 3 பேரும் புரோக்கர்களாகவே செயல்பட்டு வந்துள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த சுந்தர் உள்பட மேலும் 2 பேருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தலைவராக சென்னையைச் சேர்ந்த முக்கிய தாத பிரமுகர் இருந்து வருகிறார்.

3 பேர் பிடிபட்டதும் சுந்தர் உள்பட கும்பல் தலைவனும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க திருச்சி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமி‌ஷனர் சக்திகணேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பரமேஸ்வரனின் கூட்டாளியான நாகராஜ் வீட்டில் போலீசார் கள்ள ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் ரூ.65 ஆயிரம் கள்ள நோட்டுக்கள் சிக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com