

திருத்துறைப்பூண்டி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக வேறு இடங்களில் கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், கிராமப்புறங்களில் உள்ள மதுக்கடையை மூடக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூரில் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு மதுகுடிக்க வருபவர்களால் தொல்லை ஏற்படுவதாக கூறி பல்வேறு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுக்கடையை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோசப், சந்தர்ராமன், மாநிலக்குழு உறுப்பினர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, மாவட்ட துணைச்செயலாளர் சுஜாதா, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமிழ்ச்செல்வி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், தாசில்தார் உதயகுமார், டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.