4- வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி நாளை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். #SAvIND
4- வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா
Published on

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

6 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டி முடிந்துள்ளது.

டர்பனில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் கேப்டவுனில் நடந்த 3-வது போட்டியில் 124 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி நாளை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவான நிலையில் இருக்கிறது. கேப்டன் விராட்கோலி ரன் எந்திரமாக உள்ளார். அவர் 2 சதம் உள்பட 318 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

அடுத்து தொடக்க வீரர் ஷிகர் தவான் 162 ரன் எடுத்து உள்ளார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா இன்னும் சொபிக்கவில்லை. இதனால் அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். ரகானே, பான்ட்யா, டோனி, கேதர் ஜாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் சுழற்பந்து கூட்டணியான குல்தீப் யாதவ்-சாஹல் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா திணறி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டியில் சாஹல் 11 விக்கெட்டும், குல்தீப் 10 விக்கெட்டு என இருவரும் மட்டுமே 21 விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர்.

நாளைய போட்டியிலும் குல்தீப்- சாஹல் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை.

முதல் முறையாக தொடரை வெல்ல இந்தியா நல்ல வாய்ப்பு உள்ளது. அதனை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்.

தென்ஆப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் திணறி வருகிறது. கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது டிவில்சியர்ஸ் திரும்பி இருப்பது அந்த அணிக்கு ஆறுதல் தரக்கூடிய வி‌ஷயமாகும். ஆனாலும் முன்னணி பேட்ஸ் மேன்களான ஹசிம் ஆம்லா, டுமிஸ், மார்கிராம், டேவிட் மில்லர் ஆகியோர் ரன் குவிக்க திணறி வருகிறார்கள்.

குல்தீப்-சாஹல் சுழற்பந்து வீச்சை சமாளித்து எப்படி ரன் எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ், ரபடா, இம்ரான்தாகீர், நிகிடி ஆகியோர் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வி சந்தித்துள்ள தென்ஆப்பிரிக்கா நாளைய போட்டியிலும் தோற்றால் தொடரை இழக்கும். தொடரை சமன் செய்ய எஞ்சியுள்ள 3 போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இதனால் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 81-வது போட்டியாகும். இதுவரை நடந்த 80 ஒருநாள் போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, அக்‌ஷர் பட்டேல், ‌ஷர்துல் தாக்கூர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com