இந்தியா பாலஸ்தீனம் இடையேயான உறவு காலம்கடந்து நிலைத்து நிற்கிறது  - பிரதமர் மோடி

இந்தியா பாலஸ்தீனம் இடையேயான உறவு காலம்கடந்து நிலைத்து நிற்கிறது - பிரதமர் மோடி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாசை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசினார். #PMModi #MiddleEastVisit #MahmoudAbbas #Palestine
Published on

புதுடெல்லி:

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாசை சந்தித்து பேசினார். 

நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜோர்டான் சென்ற அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் ஹுசைனை சந்தித்து பேசினார். அங்கிருந்து இன்று பாலஸ்தீனம் நாட்டுக்கு வந்தார். அவரை பாலஸ்தீனம் நாட்டு பிரதமர் ரமி ஹமதல்லா வரவேற்றார். அங்கிருந்து முன்னாள் பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபட்டின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாசை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும், இந்தியா - பாலஸ்தீனம் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டனர். 

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-

பாலஸ்தீன மக்கள் ஒரு நிலையற்ற சூழலில் இருந்த போதிலும், மிகவும் கடுமையான காலங்களில் தொடர்ந்து தங்கள் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் முன்னோக்கி சென்றது பாராட்டுக்குரியது, அதை நாங்கள் பாராட்டுகிறோம். பாலஸ்தீனத்தில் ஒரு இராஜதந்திர அமைப்பு நிறுவப்படுவதற்கு இந்தியா உதவி வருகிறது. இந்த வருகையின் போது முன்னேற்றப்பாதையில் நம் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறது என்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தாண்டு முதல் இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மாணவர்கள் பரிமாற்ற எண்ணிக்கை 50-ல் இருந்து 100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் சமாதானம் ஏற்பட நாங்கள் விரும்புகிறோம், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு நிரந்தர தீர்வு சாத்தியமாகும் என நாங்கள் நம்புகிறோம். 

இவ்வாறு மோடி பேசினார்.

அதன்பின் பாலஸ்தீனத்தில் இருந்து விமானம் மூலம் ஜோர்டான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். துபாயில் நாளை நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசுகிறார். 

அடுத்த நாளான 12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார். #PMModi #MiddleEastVisit #tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com