இறைச்சிக்குள் வெடி வைத்து நரி கொலை.... தொடரும் விலங்குகள் பலி

கர்ப்பிணி யானை, கர்ப்பிணி பசுவை தொடர்ந்து திருச்சியில், இறைச்சியில் வெடி வைத்து நரி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடி வைத்து நரி கொலை
வெடி வைத்து நரி கொலை
Published on

கேரள மாநிலத்தில் கடந்த வாரம் அன்னாசி பழத்திற்குள் வெடி வைத்து யானை பலியானது. இந்த சம்பவம் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் இமாசல பிரதேசத்தில் கர்ப்பிணி பசு ஒன்று கோதுமை மாவு உருண்டையை சாப்பிட்டபொழுது அதில் இருந்த பட்டாசுகள் வெடித்துள்ளன.  இதில், பசுவின் வாய் வெடித்து சிதறியது மற்றொரு பரபரப்பினை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் திருச்சியில், இறைச்சியில் வெடி வைத்து நரி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான், நரி, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த காவிரி ஆற்றங்கரைக்கு அருகிலேயே உள்ள விவசாய நிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் வேண்டி வன விலங்குகள் அடிக்கடி வருகிறது. அவை வயல் வெளிகளையும் சில சமயங்களில் நாசப்படுத்தி செல்கிறது.

அவ்வாறு வரும் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன. வன உயிரினங்கள் வேட்டையை தடுக்கவும், இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் வனத்துறையினரும், காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியில் நேற்று சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு கும்பலை காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்களிடம் சாக்குப்பை ஒன்று இருந்ததை காவல் துறையினர் கண்டனர். உடனடியாக அதை பறிமுதல் செய்து பிரித்துப் பார்த்த போது அதில் வாய் கிழிந்த நிலையில் நரி ஒன்று உயிரிழந்த நிலையில் இருந்தது.

உடனடியாக 12 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்றும், திருவெறும் பூர் அருகேயுள்ள பூலாங்குடி காலனியைச் சேர்ந்த ராம் ராஜ் (21), சரவணன் (25), ஏசு தாஸ் (34), சரத்குமார் (28), தேவதாஸ் (41), பாண்டியன் (31), விஜயகுமார் (38), சத்திய மூர்த்தி (36), சரத்குமார் (26), ராஜ மாணிக்கம் (70), ராஜூ (45), பட்டம்பிள்ளை (78) ஆகியோர் என்பது தெரிய வந்தது. பின்னர் 12 பேரும் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த கும்பல் தொடர்ந்து வன உயிரினங்களை வேட்டையாடி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் துப்பாக்கி, ஈட்டி, வலை விரித்தும் வேட்டையாடி வந்துள்ளனர். குறிப்பாக இறைச்சிக்குள் நாட்டு வெடியை மறைத்து வைத்து, அதைக் கடிக்கும்போது வெடித்த பின்னர் வன உயிரினங்கள் வலியால் நிலை தடுமாறும்போது அவற்றைப் பிடித்துள்ளனர்.

இந்த வேட்டை முறையைப் பயன்படுத்திதான் நரிக்கு வெடி மருந்து கலந்த இறைச்சியைச் சாப்பிட வைத்து பிடித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த தந்திர முறைகளை கையாண்டு இதுவரை ஏராளமான வன விலங்குகளை வேட்டையாடி இருக்கலாம் என்று வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதன்பேரில் அவர்களி டம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com