மனைவிக்கு பற்கள் அழகாக இல்லாததால் முத்தலாக் கொடுத்த கணவர்
ஐதராபாத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மனைவி ருக்சனா. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் ருக்சனா ஐதராபாத் போலீசில் அளித்த புகாரில் தன்னை கணவரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். எனது பற்களின் வரிசை ஒழுங்காக இல்லை என்று கூறி கணவர் முஸ்தபா எனக்கு முத்தலாக் (விவாகரத்து) கொடுத்துள்ளார் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து முஸ்தபா மீது வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ருக்சனா கூறியதாவது:-
அவர்கள் தொடர்ந்து என்னை கொடுமைப்படுத்தி 15 நாட்கள் தனி அறைக்குள் பூட்டி வைத்தனர். கணவர் முஸ்தபா என்னிடம் உனது பற்கள் வரிசை ஒழுங்காக இல்லாமல் இருக்கிறது. இதனால் உன்னை பிடிக்கவில்லை. இனிமேல் உன்னுடன் வாழ முடியாது என்று கூறினார். பின்னர் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நான் போலீசில் புகார் செய்தேன். அப்போது கணவர் அவரது குடும்பத்தினர் சமரசம் பேசி என்னை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினர்.
ஆனால் அக்டோபர் 1-ந்தேதி எனது தாய் வீட்டுக்கு வந்த கணவர் முஸ்தபா என்னை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்பவில்லை என்றும் முத்தலாக் கொடுப்பதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் 12-ந்தேதி செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் முத்தலாக் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் போலீசில் புகார் செய்தேன்.

