

தென்காசி:
தென்காசி குளத்தூரான் கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமிநாராயணன். 28-வது வார்டு பா.ஜ.க. தலைவரான இவர் இந்து அமைப்பான பாரத் சேனா செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு லெட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று நள்ளிரவில் மர்ம நபர் அந்த மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை எழுந்து வந்த லெட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த இந்து அமைப்பினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபரை கண்டுபிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிந்து லெட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர் யார்? எதற்காக தீ வைக்கப்பட்டது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.