

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படுகின்றன. இதற்காக சாலைகள் மற்றும் நடைபாதைகளை மறித்து பெரிய பந்தல்களை அமைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இதற்காக சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்படுகின்றன.
விரைவில் விநாயகர் சதுர்த்தி வருவதால், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதை ஒழுங்குப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல், விநாயகர் சிலை வைக்கப்படுவதை தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
மேலும், சிலைகளை வைப்பதற்கும், மின்சாரம் வினியோகம் செய்வதற்கும், தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும். இந்த சான்றிதழின் அடிப்படையில் தான் விநாயகர் சிலை அமைக்க போலீசார் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், விநாயகர் சிலைகளை வைப்பதை கண்காணிக்கவும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் 62 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.