

சென்னை:
நாமக்கல் மாவட்டம், சீதாராம்பாளையத்தை சேர்ந்தவர் வைரவேல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். ஆண்டாளைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம் 26ந்தேதி, மாதொரு பாகன் இறைப்பணி மன்றம் சார்பில் திருச்செங்கோட்டில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, ‘உலகத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆண்டாளைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ யாரும் எதுவும் இனிமேல் பேசக் கூடாது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ஆண் டாள் குறித்து பொதுக் கூட்டத்தில் பேசப்போவதாக தகவல் வந்துள்ளது. அவர் பேசினால், அந்த கூட்டம் நடக்கும் இடத்துக்கு நாங்கள் சென்று, அவர்களை துன்புறுத்துவோம்.
எத்தனை காலம் தான் சாமியார்கள் அமைதியாக இருப்பது? எங்களுக்கும் கல் வீசத் தெரியும். சோடா பாட்டில்களை எறியத் தெரியும். நாங்கள் எல்லாம் அமைதியானவர்கள் என்று நினைக்காதீர்கள். எதையும் செய்யும் தைரியம் எங்களுக்கும் உள்ளது’ என்று ஜீயர் பேசியுள்ளார்.
இவரது பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் இரு பிரிவினர் இடையே மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் விதமாக சடகோப ராமானுஜ ஜீயர் பேசியுள்ளார். இதையடுத்து அவருக்கு எதிராக திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.
அதில், கலவரத்தில் ஈடுபடும்படி மத அமைப்புகளை ஜீயர் தூண்டி விடுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தேன். ஆனால், இதுவரை திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவே, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சடகோபா ராமானுஜ ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews