

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள கிளியாபட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் குணா (வயது 9), அந்த பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் பள்ளியில் இருந்து குணா வெளியே சென்றான். இதனை வகுப்பு ஆசிரியை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மாலையில் வெகு நேரமாகியும் குணா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடியுள்ளனர். அப்போது பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், சிறுவன் குணா பகலிலேயே வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் குணாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவனது தந்தை ரமேஷ், மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குறிஞ்சலாறு பகுதியில் ஒரு சிறுவனின் பிணம் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது குணா என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவன் பள்ளியில் இருந்து வெளியேறியதை 4-ம் வகுப்பு ஆசிரியை கங்கா, தலைமை ஆசிரியை தமிழ்செல்வி ஆகியோர் கவனிக்காமல் கவனக்குறைவாக இருந்ததாக 2 பேரையும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மாணவன் குணா பள்ளியில் இருந்து 11 மணியளவில் வெளியே சென்றுள்ளான். இதனை பள்ளி வகுப்பு ஆசிரியையும், தலைமை ஆசிரியையும் கண்டு கொள்ளாமல் பொறுப்பின்மையோடு செயல்பட்டு உள்ளனர். இதனால் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.