

புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் கடந்த 1999-2000 ஆண்டில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் தலைவர் அஜய் சவுதாலா அவரது தந்தை முன்னாள் முதல்வர் ஓ பி சவுதாலா உட்பட 55 பேர் மீது 2009 ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுதாலாவிற்கு சிறப்பு அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த
தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறையிலுள்ள சவுதாலா குரு ஜம்பேஷ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொலைதூர கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ படிப்பு (PGDCPM) படித்து வந்தார். அவருக்கு இந்த மாதம் தேர்வு இருப்பதால் தேர்வு எழுத அனுமதிக்குமாறு சவுதாலா, மாநில கவர்னருக்கு மனு அனுப்பி இருந்தார். ஆனால், கவர்னர் அனுமதி அளிக்காததால் தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசுதோஷ் குமார் சவுதாலா தேர்வு எழுத பரோல் அளித்தார். ஜூலை 4-8 பரோலில் சென்று 9ம் தேதி மறுபடியும் சிறைக்கு திரும்பி, பின்னர் 11-12 பரோலில் சென்று 13ம் தேதி திரும்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அவரை பாதுகாப்பாக ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசாருக்கு அழைத்து செல்லுமாறு போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.