பள்ளிக்குழந்தைகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்: பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பள்ளிக்குழந்தைகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்: பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பழனி அருகே பள்ளிக் குழந்தைகளிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
Published on

பழனி:

பழனி அருகே உள்ள தாராபுரம் ரோட்டில் புளியம்பட்டிக்கு 2 கி.மீ தொலைவில் தும்மலப்பட்டி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 26 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஞானசேகரன் உள்ளார். இவர் தவிர மேலும் ஒரு ஆசிரியர் பணியில் உள்ளார்.

ஞானசேகரன் பள்ளி குழந்தைகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், சிலரிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகளின் பெற்றோர் இன்று பள்ளி முன்பு குவிந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியரை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அது வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் புகார் தெரிவித்த குழந்தைகளிடமும் ஒவ்வொருவராக விசாரித்தனர். தலைமை ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி பள்ளிக் குழந்தைகள் மீது தகாத முறையில் நடந்தது உண்மை என தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இருந்தபோதும் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com