

கும்மிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு வெட்டுகாலனி. புதிய அரிசன குடியிருப்பு பகுதியில் 1976-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையில் 80 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கு பொது வழி மற்றும் குறுக்கு வழிகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு வழி விட மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுக்கு பொதுவழி ஏற்படுத்தி தர கோரி அப்பகுதி மக்கள், கும்மிடிப்பூண்டி பஜார் சாலையான ஜி.என்.டி. சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் செய்தனர். இதில் பெண்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது தாசில்தாரை வரவழைத்து இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews