

விருதுநகர்:
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதில் பட்டாசை ஆடம்பர பட்டியலில் சேர்த்த மத்திய அரசு 28 சதவீதம் வரி விதித்துள்ளது. இதேபோல் தீப்பெட்டி உற்பத்திக்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, முத்தண்டியாபுரம், சங்கரபாண்டியாபுரம், கீழசெல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
ஜி.எஸ்.டி. வரியை மறு பரிசீலனை செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பட்டாசு தொழிற் சாலைகள் விருதுநகர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.