

புதுச்சேரி:
தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதுவை அரசுக்கு கிரண்பேடி அளிக்கும் இடையூறுகள் ஒரு கட்டத்தை தாண்டி நேரிடையாக பொதுமக்களை பாதிக்கும் நிலையை எட்டியுள்ளது.
ஆரம்ப காலத்தில் அரசு அனுப்பும் கோப்புகளுக்கு அனுமதி அளிக்காமல் அவற்றை திருப்பி அனுப்பி கொண்டு இருந்தார். தனக்கு சாதமாக தலைமை செயலாளர் செயல்பட வில்லை என்பதால் அவரை தன் செல்வாக்கின் மூலம் இடமாற்றம் செய்தார். இதுபோல் தனக்கு சாதமாக செயல்படாத அதிகாரிகளை மிரட்டி பணியவைக்கும் வேலையில் ஈடுபட்டார்.
அடுத்த கட்டமாக அரசியல் ரீதியாக நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நேரிடையாக மத்திய அரசே நியமிக்க பரிந்துரை செய்தார். அந்த நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரவோடு, இரவாக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன் மூலம் பாரதீய ஜனதா அரசை கொல்லைப்புறமாக நிறுவ மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இதன் மூலம் கவர்னர் பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதையும் நிரூபித்தார்.
கவர்னரின் இந்த செயல்பாடு புதுவை மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்தது. தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக வார இறுதி நாட்களில் ஆய்வுக்கு செல்கிறோம் என்ற போர்வையில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமல் அவர்களுடைய தொகுதிகளுக்கு செல்கிறார். விடுமுறை நாட்களில் கூட அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் அலைக்கழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2 ஆண்டு காலத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் அவர் ஈடுபட்டும் எந்த பணியும் முழுமை பெறவில்லை. பிரதமர் மோடியிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் அறிவிக்கப்படாத தூதராக கவர்னர் புதுவையில் வலம் வந்தார்.
ஆனால், புதுவை தூய்மையாக இன்று இல்லையென அறிவிப்பை அவரே வெளியிடுகிறார். இதன் மூலம் அவரது ஆய்வுகளால் பலனில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை புதுவையில் செயல்படுத்த முடியாததால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே அவர்?
ஆனால், அதைவிடுத்து ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு மனிதனை கடிப்பது போல அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வந்த கவர்னர் கிரண்பேடி தற்போது நேரிடையாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
கிரண்பேடியின் சர்வாதிகார செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் எங்கள் கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி இன்று காலை 10.00 மணிக்கு புதுவை மாநில தி.மு.க. சார்பில் தலைமைக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த மாபெரும் போராட்டத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., திராவிடர் கழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், படைப்பாளி மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு, பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்று நமது எதிர்ப்பை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.