திருச்சி அருகே சிறுமி கொலை- 2 பேரிடம் போலீசார் விசாரணை

திருச்சி அருகே சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் உறவினர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் உறவினர்கள் கதறி அழுத காட்சி
மாணவியின் உறவினர்கள் கதறி அழுத காட்சி
Published on

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி(வயது 14). இவர், எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 12 மணியளவில் சக தோழிகளுடன் விளையாடினாள்.

பின்னர் வீட்டுக்கு சென்ற அவள், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக் கொண்டு முள்காட்டில் கொட்டச் சென்றாள். அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவளை மர்ம நபர்கள் சிலர் மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் உடல் கிடந்தது எப்படி தெரியும் என்ற கோணத்தில் 2 பேரிடம் விசாரணை நடக்கிறது.

மத்திய மண்டல ஐ.ஜி.ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com