

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரியமிக்க உணவு அல்லது பொருட்கள் என்று ஏதாவது ஒன்று மிகப்பிரபலமாக இருக்கும். இவ்வகை பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் போது, வேறு பகுதியைச் சார்ந்தவர்கள் அந்த பிரபலமான உணவு உருவான இடத்தை வைத்து வணிகம் செய்து விடக்கூடாது என்பதற்காக புவிசார் குறியீடு என்ற முறை கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மாம்பழம் போன்றவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இதனால், வேறு பகுதியில் மேற்கண்ட உணவுப் பொருட்களை அதே பெயரில் உருவாக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட பொருளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது அப்பொருள் அந்த இடத்தில் உருவானதற்கான வரலாற்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கேற்ப புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மாம்பழங்களில் ஒரு வகையான மிகச் சிறந்த சுவையுடைய பங்கனபள்ளி மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு ஆந்திர மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் சென்னையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இவ்வகை மாம்பழம் ஆந்திராவில் 100 ஆண்டுகள் பாரம்பரியத்தை கொண்டது எனவும், பழங்களுக்கெல்லாம் ராஜா எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விண்ணப்பத்துடன் பங்கனபள்ளி மாம்பழம் அங்கு பூர்வீக வரலாற்றை கொண்டுள்ளதற்கு சான்றாக சில ஆவணங்களும், சுமார் 7.28 லட்சம் பேர் இவ்வகை மாம்பழம் விளைவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதற்கான சான்றுகளும் சமர்பிக்கப்பட்டது. இதை பரிசீலித்த அதிகாரிகள் பங்கனபள்ளி மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு அளித்துள்ளனர்.