வேலூரில் நள்ளிரவு சாலை கெங்கையம்மன், பொன்னியம்மன் கோவில் தேர்கள் தீ பற்றி எரிந்தன

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன், பொன்னியம்மன் கோவில் தேர்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் நள்ளிரவு சாலை கெங்கையம்மன், பொன்னியம்மன் கோவில் தேர்கள் தீ பற்றி எரிந்தன
Published on

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் சாலை கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு புதியதாக தேர் செய்யப்பட்டது.

கோவில் அருகே இந்த தேரை நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் பொன்னியம்மன் நகர் பாலாற்றங்கரையில் உள்ள பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேரும் இதன் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 2 தேர்களும் தீ பற்றி எரிந்தது. சாலைகளில் சென்றவர்கள் இதனை கண்டு திடுக்கிட்டனர். உடனே அப்பகுதி பொதுமக்களை கூச்சலிட்டு எழுப்பினர். பொதுமக்கள் திரண்டு தேர்கள் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வேலூர் தீயணைப்பு படையினர் வந்து பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். 2 தேர்களும் பாதிக்குமேல் எரிந்துள்ளது.

இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்களின் அருகே மின்சார ஒயர்கள் எதுவும் இல்லை. தானாக தீ பிடிக்க வாய்ப்பு இல்லை. சமூக விரோதிகள் வேண்டும் என்றே தேர்களுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தேர்களின் அருகே தினமும் கும்பல் மது அருந்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துமுன்னணி கோட்ட தலைவர் மகேஷ் இன்று காலை எரிந்த தேர்களை பார்வையிட்டார். அவர் கூறும்போது:-

சமூகவிரோதிகள் செயல்பாடுகளால் தான் தேர்கள் எரிந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாலங்காடு கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து வேலூரில் தேர்கள் எரிந்துள்ளன.

இது தமிழகத்துக்கு ஆபத்துக்கான எச்சரிக்கை இதனால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் தனிப்படை அமைத்து கோவில்களில் தீ விபத்து ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com