பல்கலைக்கழக அலுவலகத்திற்கு தீ வைத்த முன்னாள் மாணவர்

குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக தலைமை அலுவலகத்திற்கு தீ வைத்த கவின் கலை முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.
பல்கலைக்கழக அலுவலகத்திற்கு தீ வைத்த முன்னாள் மாணவர்
Published on

வதோதரா:

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மோகன் என்பவர், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு படித்துள்ளார். 2007-ல் கவின் கலை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடிந்ததும் தனக்கு பட்ட சான்றிதழ் வழங்கக்கோரி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், சான்றிதழ் வழங்க தாமதம் ஆனது. இதுதொடர்பாக பலமுறை கடிதம் எழுதியும் அவருக்கு பதில் இல்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சந்திர மோகன், நேற்று மாலை பல்கலைக்கழகத்திற்கு வந்து துணைவேந்தரை சந்தித்து காரணத்தை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சந்திக்க முடியவில்லை. இதுதொடர்பாக துணைவேந்தரின் உதவியாளருக்கும் சந்திர மோகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சந்திர மோகன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அலுவலக சோபாவில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் துணை வேந்தரின் அலுவலகம் உள்ளிட்ட 2 அறைகளில் தீ பரவியது. அங்கிருந்த சில ஆவணங்களும் கருகின. அப்போது துணை வேந்தர்  தனது அறையில் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திர மோகனை கைது செய்தனர். இச்சம்பவம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com