பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய மத்தியபிரதேச முன்னாள் முதல்மந்திரி
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும்
வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேர்தலுக்காக இரு கட்சிகளும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் டப்ரா தொகுதியில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள இம்ரதி தேவி போட்டியிடுகிறார். மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது அந்த அமைச்சரவையில் மந்திரியாக செயல்பட்டவர் இம்ரதி தேவி.
இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சின்ஹா பாஜகவில் இணைந்தபோது அவருடன் சேர்ந்து பாஜகவில் இணைந்துகொண்டார்.
தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் டப்ரா தொகுதியில் போட்டியிட இம்ரதி தேவிக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து,அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், டப்ரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்தியபிரதேச முன்னாள் முதல்மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பாஜக வேட்பாளர் இம்ரதி தேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கமல்நாத் கூறியதாவது:-
’எங்கள் வேட்பாளர் அவர்களை (இம்ரதி தேவி) போன்று கிடையாது. அவள் பெயர் என்ன? (கூடியிருந்தோர் இம்ரதி தேவி என கோஷமிட்டனர்).. உங்களுக்கு அவளைப்பற்றி நன்றாக தெரியும்.. நீங்கள் என்னை முன்னதாகவே எச்சரிக்கை செய்திருந்தீர்கள்... அவர் மிகவும் கேவளமானவர்...’
என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கமல்நாத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச பாஜக தலைவர் விடி சர்மா பதிலடியாக அவரும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
பாஜக தலைவர் விடி சர்மா கூறியதாவது:-
’கமல்நாத், நீங்கள் இம்ரதி தேவையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மத்திய பிரதேச பெண்களையும் இழிவுபடுத்திவிட்டீர்கள்... கத்திரினா கைப் தான் உங்களுக்கு கேவளமானவராக இருக்க முடியும், இம்ரதி தேவி எங்கள்
சகோதரி’ என கூறி பாஜக தலைவரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

