

கரூர்:
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இந்த 18 பேரும் தற்போது கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
நாமக்கல் கட்டிட காண்டிராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகிறார்கள். அவரை பிடிக்க நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குடகு விடுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அவரும் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குடகு மலையில் முகாம் இட்டுள்ளனர்.
சென்னை நீலாங்கரையை சேர்ந்த கோபி உள்பட 35 பேர் சென்னை மாநகர போலீசில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு புகார் அளித்திருந்தனர். அதில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடியே 25 லட்சம் வாங்கி செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. தற்போது இந்த புகார் விசுவரூபம் எடுத்துள்ளது.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை தேடி வருகிறார்கள்.
இவர்களில் ஒரு பிரிவினர் குடகுமலையிலும், இன்னொரு பிரிவினர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும் முகாம் இட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர் மற்றும் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் இன்று மதியம் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். சுமார் 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக ராமகிருஷ்ணா நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பரும், கடந்த தேர்தலின்போது அவரது வரவு, செலவு கணக்குகளை கவனித்து வந்த வருமான ஆர்த்தி சுவாமிநாதனுக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், ராமகிருஷ்ணா நகர் வடக்கு பகுதியில் உள்ள தியாகராஜனுக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், கரூர் ராம்நகரில் உள்ள செந்தில்பாலாஜியின் நண்பர் தியாகராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் ராயனூர் சுப்பிரமணி வீடு உள்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.