

திருப்பூர்:
திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு அவினாசி, சத்தியமங்கலம், நிலக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து அனைத்து வித பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வெளியூர் பூ வரத்து நின்று விட்டது. சாதாரண நாட்களில் இங்கு தினசரி 7 டன் பூக்களும், திருமண நாட்கள், கோவில் விசேஷங்கள், பண்டிகைகள் போன்ற நாட்களில் 15 டன்கள் வரையும் பூக்கள் விற்பனை நடக்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாக பூ மார்க்கெட்டுக்கு வெளியில் உள்ள சந்து சாலைகளில் நின்ற கொண்டு ஒரு சில வியாபாரிகள் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். அவினாசி பகுதியில் இருந்து விவசாயிகள் இவர்களுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இங்கு தினசரி 100 கிலோ பூக்கள் கூட விற்பது இல்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வியாபாரிகள் பூ மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்கள். திருமணம், கோவில் விசேஷம், பண்டிகை எதுவும் இல்லாததால் பூக்கள் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.80-க்கும், முல்லைப்பூ ரூ.60-க்கும், அரளி ரூ.30-க்கும், பட்டுப்பூ ரூ.20-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பூ மொத்த வியாபாரிகள் கூறும் போது காலை 7 மணிமுதல் மதியம் 1 மணி வரை வியாபாரம் செய்கிறோம். மக்கள் மிக மிக குறைவாகவே வருகிறார்கள். எனவே தினசரி 100 கிலோ விற்பதே சிரமமாக உள்ளது என்றனர்.