

பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் மேலகஞ்சிமேடு தெருவில் வசித்து வருபவர் வேலு (வயது 55 ). பாத்திரகடை உரிமையாளர்.
இவர் பாபநாசம் மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 11-ந் தேதி வேலுவும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்பட 15 பவுன் நகைகள், கேமரா மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் உத்தரவின் படி பாபநாசம் போலீஸ் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஏட்டு சம்பத் மற்றும் போலீசார் தொடர்ந்து புலன்விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.
பின்னர் விசாரணையில் நேப்பாளை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கூர்க்கா மற்றும் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் கந்தர்வகோட்டை லோகேஷ் (23), சென்னையை சேர்ந்தவர்களான தினேஷ் (27), பிரகாஷ் (24), பாஜி(24), திகாராம்(27) ஆகிய 5 பேரும் கூர்க்கா மற்றும் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தனர். 5 பேரும் சேர்ந்து பாபநாசம் வேலு வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் தனிப்படை போலீசார், 5 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் உத்தரவின்பேரில் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.