5-வது நாளாக மீன்பிடிக்க தடை: ராமேசுவரத்தில் ரூ.4 கோடி இறால் வர்த்தகம் பாதிப்பு

சூறாவளி காற்று காரணமாக கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 4 கோடி இறால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க தடை
மீன்பிடிக்க தடை
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் பாம்பன் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, கீழக்கரை, ஏர்வாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால் 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ராமேசுவரத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாரத்தில் ரூ. 8 கோடி மதிப்பிலான இறால், நண்டு, மீன்கள் வர்த்தகம் நடைபெறும்.

ஆனால் தற்போது தடை காரணமாக ரூ. 4 கோடி இறால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பாம்பன் பகுதி சூறாவளி காரணமாக ரெயில் பாலத்தில் கடந்த 4 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. ஆனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இன்றும் அதே நிலைமைதான் நீடிக்கிறது.

ராமேசுவரத்தில் முன் பதிவு செய்த பயணிகள் பஸ் மூலம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ரெயில்களில் செல்கின்றனர்.

கீழக்கரையில் சூறாவளி காற்றால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ஏர்வாடி பகுதிகளில் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைந்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. மீன் வரத்து குறைவால் விலையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com