

பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 15-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதையடுத்து அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் படுதீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு எதிராக குஜராத் எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி தொடர் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த ஜிக்னேஷ் மேவானி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்,
தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் மோடியிடம் நீங்கள் கேள்வி கேளுங்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது என கேள்வி எழுப்புங்கள்.
அனைவரது வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடப்படும். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மீட்கப்படும் என்றெல்லாம் அளித்த வாக்குறுதிகள் என்னவானது என கேள்வி கேளுங்கள். மேலும் நாற்காலிகளை தூக்கி வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என பேசினார். இவரது பேச்சுக்கு கர்நாடக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் ஜிக்னேஷ் மேவானி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #KarnatakaElections2018 #JigneshMevani