பொன்னேரி அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்

பொன்னேரி அருகே தாயை தாக்கிய ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த கல்லுக்கடைமேடு பகுதியில் வசித்து வந்தவர் ரவி (48). இவரது மனைவி ராணி. இவர்களது மகன் சுதாகர். இவர் பெரும்பேடு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

ரவிக்கும் அவரது மனைவி ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த ரவி, மனைவி ராணியிடம் பணம் கேட்டு தாலி செயினை அறுத்தார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதுபற்றி ராணி மகன் சுதாகருக்கு தெரிவித்தார். இதனால் தந்தை மீது சுதாகர் கோபத்தில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை திருவாயர்பாடியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மது போதையில் ரவி வந்தார். இதனை கண்ட சுதாகர் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

ஆத்திரம் அடைந்த சுதாகர் அருகில் கிடந்த கட்டையால் தந்தை ரவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரவி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com