

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 85). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை இயக்குனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருப்பத்தூர், பேராம்பட்டு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் அவருடைய வீட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். வீடுமுழுவதும் மிளகாய்பொடு தூவப்பட்டிருந்தது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, தாலுகா இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலகிருஷ்ணனுக்கும், அவரது மகன் சேது என்பவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு இருந்தது தெரியவந்தது. மேலும் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சாவியை வைத்திருந்த அவருடைய மகன் சேது மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து சேதுவை போலீசார் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தந்தையை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் போலீசில் கூறியதாவது:-
நான் டி பார்ம் படித்துள்ளேன். எந்த வேலைக்கும் செல்லாமல் என் தந்தைக்கு உறுதுணையாக இருந்து கொண்டு அவர் கூறும் வேலைகளை செய்து வந்தேன். எனது தந்தைக்கு பல இடங்களில் வீடுகள் மற்றும் 300 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் பணம் உள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டாவது திருமணம் ஆகி கைக்குழந்தை உள்ளது. எனது குடும்பத்தை காப்பாற்ற அடிக்கடி எனது தந்தையிடம் தான் பணம் கேட்க வேண்டிய நிலை உள்ளது.
ஆகையால் திருப்பத்தூரில் மருந்து கடை வைக்க ரூ.5 லட்சம் பணம் கேட்டேன். அதற்கு அவர் ரூ.1000 கொடுத்து என்னை திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து அவர் தலையில் அடித்தேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்தார். உடனடியாக நான் பீரோவில் இருந்த துணிகளை எல்லாம் கலைத்து போட்டுவிட்டு நாய் மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு வெளியே பூட்டிக் கொண்டு எனது வீட்டிற்குச் சென்று ஒன்றும் தெரியாதது போல மீண்டும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துசென்றேன். வீட்டை திறந்து உள்ளே சென்று யாரோ மர்ம நபர்கள் பணம், நகையை கொள்ளை அடித்துக் கொண்டு, எனது தந்தையை கொலை செய்து விட்டுச் சென்றதாக நாடகம் ஆடினேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.