ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

ஆலங்குளம் அருகே தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது49), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு வெளியே உள்ள மலைப்பகுதியில் உள்ளது. தோட்டத்தில் இவர் காய்கறி பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் மலைப் பகுதிகளில் இருந்து பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இதனால் அவற்றை விரட்டுவதற்காக பேச்சி முத்து இரவு தோட்டத்திற்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பேச்சிமுத்து அவரது தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தார். 

இதுபற்றி ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக பேச்சிமுத்துவின் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இரவு காவலுக்கு சென்ற பேச்சிமுத்து கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com