கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆனந்தி
ஆனந்தி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள பொன்னுசாமி நகரில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர் ஆனந்தி (வயது 51) என்பவரை கடந்த ஆண்டு திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தி சுமார் 1000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் அவர் வெளியே வந்தார். அவரை போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் திருவண்ணாமலையில் செங்குட்டுவன் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஆனந்தி மீண்டும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தியையும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (20) என்பவரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

தொடர்ந்து ஆனந்தி சட்டவிரோதமாக கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வருவதால் அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த நவீன்குமாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சக்ரவர்த்தி, கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆனந்தி மற்றும் நவீன்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான நகல் ஜெயிலில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

ஆனந்தி 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com