

நெல்லை:
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலி தொழிலாளி. கடந்த 23ந்தேதி இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதுசரண்யா, அட்சய பரணிகாவுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். காசிதர்மத்தை சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ் ஆகியோர் தங்களை கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி அவர்கள் திடீரென உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.
அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இது தொடர்பாக பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துலட்சுமி, தளவாய்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இசக்கிமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய நபர் யார்? இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட நபர் எங்கே என்றும் விசாரணை நடக்கிறது.
இசக்கிமுத்து குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும்போது அவருடன் யார் யார் வந்தனர்? அவரிடம் கடைசியாக செல்போனில் பேசியவர் யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. 4 பேர் தற்கொலை மற்றும் அதன் பின்னணியை முழுமையாக விசாரிக்கும் வகையில் இந்த வழக்கு விசாரணை சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பிரிவு போலீசார் 4 பேர் தற்கொலை வழக்கை மட்டும் எடுத்து விசாரிக்கிறார்கள்.
இவர்களில் ஒரு பிரிவு போலீசார் நெல்லையிலும், மற்றொரு பிரிவு போலீசார் காசிதர்மத்திலும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இவர்கள் தவிர பாளை போலீசார், தனிப்பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். சம்பவம் நடந்த அன்று உள்ள வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.