திருமணம் ஆன 10 மாதத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

திருமணம் ஆன 10 மாதத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

மத்தூர் அருகே திருமணம் ஆன 10 மாதத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சந்தியா (வயது 20). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சந்தியாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த முரளி (25) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மாமனார் முருகனிடம் பணம் வாங்கி வருமாறு கூறி சந்தியாவிடம், முரளி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கோபித்துக்கொண்ட சந்தியா தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற முரளி, சந்தியாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்தியாவின் தந்தை முருகன், மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 10 மாதத்திற்குள் சந்தியா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சந்தியாவின் உறவினர்களும், முரளியின் உறவினர்களும் திரண்டு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com