

மேட்டுப்பாளையம்:
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நல முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி இந்த ஆண்டு கோவில் யானைகள் சிறப்பு நல முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
முகாமை நாளை காலை அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். முகாமிற்கு இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 34 யானைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக யானைகள் முகாம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அங்கு சமையல் கூடம், உணவருந்தும் கூடம், தீவன மேடை, பாகன்கள் ஓய்வு அறை, பாகன்கள் பொழுது போக்குமிடம், பணியாளர்கள் மற்றும் யானைகளுக்கான மருத்துவ முகாம் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.
முகாம் நாளை தான் தொடங்குகிறது என்றாலும் இன்று காலை முதலே முகாமிற்கு யானைகள் வரத் தொடங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அவையாம்பாள் முதல் முதலாக வந்தது.
அதனை தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி லாரியில் வந்து இறங்கியது. இந்த யானைகளை மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இறக்கினார்கள்.
பின்னர் கோவில் முன்பு யானைகள் அழைத்து வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வனபத்ரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜைகளை செய்தார்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் விமலா, வனபத்ரகாளியம்மன் கோவில் துணை ஆணையர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமுக்கு வந்த யானைகளை மேட்டுப்பாளையம் - அன்னூர் ரோட்டில் உள்ள எடை மேடையில் லாரியுடன் மொத்த எடை பார்த்தனர். பின்னர் முகாமிற்கு வந்த பின்னரும் எடை பார்க்கப்பட்டது.
முகாமில் யானைகள் குளிப்பதற்காக குளியல் மேடை, மேலே இருந்து தண்ணீர் தூவும் வகையில் ஷவர் பாத் மற்றும் தீவன மேடை ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
யானைகள் நடைபயிற்சி செல்வதற்காக 600 மீட்டர் சுற்றளவிற்கு நடை பாதை சீரமைக்கப்பட்டு உள்ளது. போதிய வெளிச்சம் ஏற்படுத்த 3 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவில் யானைகள் முகாம் நடைபெறும் பகுதிக்குள் காட்டு யானைகள் வருவதை கண்டறியும் வகையில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், காட்டு யானைகள் புகுந்து விடாமல் தடுக்க 2 ஆயிரம் மீட்டர் சுற்றளவில் தொங்கு வேலி, 1200 மீட்டர் சுற்றளவிற்கு சூரிய மின் வேலி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.
வெளியூர்களில் இருந்து முகாமிற்கு லாரிகளில் வரும் யானைகள் இறங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 5 இடங்களில் சாய்வு மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் யானைகளை பார்க்க பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு 2 இடங்களில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதே போல் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள 24 வனத்துறை யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நாளை தொடங்குகிறது.
இந்த முகாம் தெப்பக்காட்டில் நடைபெறுகிறது. 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறும்.இதனை தொடர்ந்து முதுமலையில் யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போல் கோவை மாவட்டம் டாப்சிலிப், கோவை அருகே சாடிவயல் ஆகிய இடங்களிலும் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கும் நாளை முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. #tamilnews