மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகள் நடைபயிற்சி - ஆனந்த குளியல்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கிய யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் காலை, மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. #Elephants #Rejuvenationcamp
மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகள் நடைபயிற்சி - ஆனந்த குளியல்
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் முகாம் நடைபெற்று வருகின்து. நேற்று தொடங்கிய முகாமில் மொத்தம் 27 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

முகாமில் கலந்து கொண்ட யானைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன. குளிர்காற்று வீசும் காலை வேளை மற்றும் மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. வயது உடல் எடைக்கேற்றாற்போல் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. நடைபயிற்சிக்குப்பின்னர் பாகன்கள் யானைகளை ‌ஷவர் மேடை மற்றும் குளியல் மேடையில் குளிக்க வைக்கின்றனர்.

யானைகள் நீண்ட நேரம் குளியல் மேடையில் ஆனந்தக்குளியல் இடுகின்றன. தண்ணீரை தும்பிக்கையால் தனது உடல்மீது வாரியிறைத்து விளையாடுகின்றன. குளியலுக்குப்பின்னர் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரிசி சாதம், கொள்ளு, பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூரணம் பயோபூஸ்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் யானைகள் தீவன மேடைக்குச்சென்று தீவனங்களை தும்பிக்கையால் எடுத்துச்செல்கிறது. யானைகள் தனது உடலில் மண்ணை வாரியிறைத்து தங்களது ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்றன.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமியும், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில் யானை அபயாம்பிகையும் ஒரு வருடத்துக்கு பின் சந்தித்ததால் ஒன்றுக்கு ஒன்று துதிக்கையால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

காட்டுயானைகள் முகாமிற்குள் புகுந்துவிடாமல் தடுக்க மாலை நேரத்தில் சூரிய மின்வேலி, தொங்கு மின்வேலிகள் இயக்கப்படுகின்றது. சீரியல் பல்புகளும் எரிய வைக்கப்படுகின்றன.  #Elephants #Rejuvenationcamp

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com