

சென்னை:
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில்கள் மற்றும் தனி நபர்கள் பராமரிப்பில் உள்ள யானைகளுக்கு ஓய்வு அளித்து அவைகளின் உடலில் உள்ள நோய்களைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை வழங்கி குணப்படுத்தவும் யானைகளுக்கு அனைத்து வகை சத்துக்களும் அடங்கிய உணவுகள் கொடுத்து அவைகளின் உடல்நலத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இம்முகாமினை நடத்த முடிவு செய்யப்பட்டது. உயிரியல் பூங்காவிலுள்ள உரிகம், கிரி, அசோக் மற்றும் பிரக்குரிதி ஆகிய நான்கு துறை யானைகளுக்கு நேற்று சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது. தொடர்ந்து 48 நாட்களுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. சிறப்பு நல வாழ்வு முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு வனக்கால் நடை பராமரிப்பு அலுவலரின் ஆலோசனைகளின்படி, உடல்நலத்தை தொடர்ச்சியாக கண்காணித்து தேவையான மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.
யானைகள் இயற்கை சூழ்நிலையில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதுமான அளவு தண்ணீர் வழங்கப்படுவதன் மூலம் யானைகளின் உடலும், உணர்வும் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். யானைகளுக்கு சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்துவதற்கு ஏதுவாக யானைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மருந்து மற்றும் உபகரணங்கள் முன் கூட்டியே வாங்கி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
முகாமில் உள்ள யானைகளுக்கு அதனுடைய உடல் நிலை, உணவு தேவைகள் ஆகியன ஆய்வு செய்யப்பட்டு அரிசி, கொள்ளு, பாசிப்பயறு, வெல்லம், மஞ்சள் ஆகிய சத்துணவுகளும், அஷ்டசூரணம், சவணப் பிராசம், மல்டிவிட்டமின், மினரல் மிக்சர் ஆகிய சிறப்பு மாத்திரைகளும் சேர்ந்த சிறப்பு உணவு வழக்கமான உணவாக தினசரி வழங்கப்படும். இவை தவிர யானைகள் மிகவும் விரும்பி உண்ணும் கரும்பு, வாழைமரம், தேங்காய், தர்பூசணி ஆகியவைகளும் தேவைக்கேற்ப வழங்கப்பட உள்ளது. #Tamilnews