எழும்பூர் ரெயில் நிலைய வடக்கு பகுதியில் எஸ்கலேட்டர் வசதி

எழும்பூர் ரெயில் நிலைய வடக்கு பகுதியில் பயணிகளாக எஸ்கலேட்டர் வசதி நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்திற்குள் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழும்பூர் ரெயில் நிலைய வடக்கு பகுதியில் எஸ்கலேட்டர் வசதி
Published on

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 25-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்கள் அனைத்தும் அங்கிருந்துதான் புறப்படுகின்றன.

மேலும் சேலம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை பயணிகள் கூட்டம் இருந்து வருகிறது. இதுதவிர புறநகர் மின்சார ரெயில் சேவையின் மையப் பகுதியாக எழும்பூர் இடம் பெறுகிறது. தாம்பரம் - செங்கல்பட்டு வரை மின்சார ரெயிலில் பயணம் செய்வோரும் அதிகளவு இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.

பயணிகளுக்கு அனைத்து நடைமேடைகளிலும் இருக்கைகள், குடிநீர் வசதி, மின் வசதி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர வை-பை வசதி, செல்போன் சார்ஜர் வசதியும் செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் தங்களின் தகவல் தொடர்பை மேம்படுத்தி கொள்ள முடிகிறது.

ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் லிப்ட் வசதி செய்யப்பட்டது போல பின் பகுதியிலும் (வடக்கு) லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள் இதன் மூலம் எளிதாக நடைமேடைக்கு செல்ல முடிகிறது.

ரெயில் நிலையத்தின் 4-வது மற்றும் 6-வது பிளாட் பாரங்களில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இவற்றின் மூலம் பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாக மாறிச் செல்கிறார்கள். காந்தி இர்வின் சாலை வழியாக வரக்கூடிய பயணிகள் இந்த எஸ்கலேட்டர் வசதியை பயன்படுத்த முடியும். ஆனால் பூந்தமல்லி சாலை வழியாக (வடக்கு பகுதி) எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்லக்கூடியவர்கள் சாய்வு பாதை வழியாக நடந்து செல்கின்றனர்.

இது படிக்கட்டு இல்லாமல் சாய்வு தளமாக இருப்பதால் வயதானவர்கள் கூட நடந்து செல்ல முடிகிறது.

தற்போது சாய்வு தளம் அருகே எஸ்கலேட்டர் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நகரும் படிக்கட்டின் வழியாக பிளாட் பாரத்திற்கு பயணிகள் எளிதாக சென்று விடலாம்.

பயணிகள் உடமைகளை தூக்கி கொண்டு நடந்து செல்வதற்கு பதிலாக எஸ்கலேட்டர் மூலம் நடைமேடை பாலத்திற்கு சென்று அங்கிருந்து விரும்பிய பிளாட்பாரங்களுக்கு செல்லலாம்.

அங்கு நிறுவுவதற்கு எஸ்கலேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான இரும்பு தூண்களும் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் 2 மாதத்திற்குள் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com