

சேலம்:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஜெயலலிதாவின் பிறந்த நாளை சீறும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். மற்ற தலைவர்களுக்கு கிடைக்காத மரியாதை எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கு கிடைக்கிறது. மறைந்த பிறகும் ஜெயலலிதாவின் புகழ் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் மனதில் இன்றளவும் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்களுக்காக இரவு, பகலாக உழைத்தவர் ஜெயலலிதா. எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கினார். ஜெயலலிதாவின் பதவிக்காலமே தமிழகத்தின் சிறந்த ஆட்சிகாலமாகும். சட்டமன்றத்தில் தாக்கப்பட்டபோது அதை தாங்கிக்கொண்டு சாதித்தவர் ஜெயலலிதா.
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். ஒரே சமயத்தில் 9 பாலங்களை அமைக்க அனுமதி அளித்தார். ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி படிக்க வழிவகுத்தவர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றும். வெற்றி பெற்றபோது இருமாப்பில் இருந்ததில்லை, தோற்றபோது துவண்டதில்லை. பொதுமக்களின் சேவையில் நான் என்றும் சோர்வடைந்தது கிடையாது. முதலமைச்சராக நான் உயர்ந்ததற்கு எடப்பாடி தொகுதி மக்களே காரணம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். #EdappadiPaliniswami #JayalaithaBirthday #tamilnews