இமாசலபிரதேச முதல்-மந்திரி குடும்பத்தின் ரூ.5½ கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், இமாசலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.5 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியது.
இமாசலபிரதேச முதல்-மந்திரி குடும்பத்தின் ரூ.5½ கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், இமாசலபிரதேச முதல்-மந்திரியுமான வீரபத்ர சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு ஒரு வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், வீரபத்ர சிங் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.5 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது.

இந்த அசையும் மற்றும் அசையா சொத்துகள், வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங், மகள் அபராஜித சிங், மனைவி பிரதிபா சிங் ஆகியோர் பெயர்களில் உள்ளன.

இவற்றில், ரூ.4 கோடியே 20 லட்சம் மதிப்புள்ளவை அசையா சொத்துகள் ஆகும். அத்துடன், ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள பங்குகளும், ரூ.20 லட்சம் வைப்பு நிதியும் முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். இதனுடன், இவ்வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இமாசலபிரதேச சட்டசபை தேர்தல், நவம்பர் 9-ந் தேதி நடைபெறும் என்று நேற்றுமுன்தினம்தான் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட போவதாக வீரபத்ர சிங் அறிவித்து இருந்தார். இந்தநிலையில், அமலாக்கப்பிரிவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com